பஞ்ச பூத ஸ்தலங்கள் -திருவானைக்கா(தொடர்ச்சி) ..............
இத்தலத்திற்கு ஆனைக்கா எனப்பெயர் ஏற்பட்டதற்கு புராணக்கதை ஒன்று உண்டு.
காட்டில் வசித்து வந்த ஓர் யானை முன்னைபயனால் ஒரு சிவலிங்கத்தைக் கண்டது. லிங்கத்தைக் கண்ட நாள் முதலாய் தினமும் காவிரியில் நீராடி தன் தும்பிக்கையில் நீரைக் கொண்டு வந்து லிங்கத்திற்கு நீராட்டி, பூக்களை பறித்து பூஜித்து, காய்கனிகளை பறித்து நிவேதனம் செய்து
அன்றாட பூஜை செய்து வந்தது. அதே சமயம், வெண்ணாவல் மரத்தில் வசிக்க தொடங்கிய சிலந்தி ஒன்று, தானும் சிவலங்கத்திற்கு ஏதாவது செய்ய நினைத்து தன் வாய் நூல் கொண்டு பந்தலமைத்து லிங்கத்தை காத்தது. லிங்கத்தை விட உயரமான இடத்தில், அதாவது மரத்தின் மேல் தான் அமர்ந்திருந்தால் அபசாரம் என்றெண்ணி அங்கிருந்து அகன்றது.
வழக்கப்படி லிங்கத்தை பூஜிக்க அங்கு வந்த யானை சிலந்தி வலையை பார்த்து கோபமுற்று அதனை தன் தும்பிக்கையினால் பிய்த்து எறிந்தது சிலந்தியின் எச்சிலை தீண்டிய துதிக்கையினால் பூசித்தல் அபசாரம் எனக்கருதி குளிக்க சென்றது. அவ்வேளையில் சிலந்தி மறுபடியும் வலை பின்னியது. யானையும் சிலந்தியும் மாறி மாறி இவ்வாறு செய்து கொண்டிருந்தது.
ஒருநாள் சிலந்தி வலை பின்னிக் கொண்டிருந்த பொழுது, யானை வந்து வழக்கம் போல வலையை தும்பிக்கையால் கலைத்தது. சிலந்திக்கு
கோபம் வந்து யானையின் துதிக்கை வழியாக புகுந்து, யானையின் தலை உச்சியில் கடித்தது. யானையின் உச்சியாகிய உயிர் நிலையல் சிலந்தி கடித்ததால் யானையின் உயிர் பிரிந்தது. யானை உயிரற்று படுத்து விட்டத்தால் சிலந்தியும் வெளியே வர முடியாது இறந்து விட்டது.
சிவத்தொண்டு செய்யும் பணியில் இரண்டு ஜீவன்களும் இறந்ததால்
சிவ பெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு யானை கைலாயத்திலிருக்கும்
பூத கணங்களுக்கு தலைமை ஏற்கவும், சிலந்திக்கு சோழ மன்னனாக பிறக்கும் படியும் வரமளித்தார்.
அன்றுமுதல் இத்தலம் ஆனைக்கா என்றும் திருவானைக்கா என்றும் வழங்கப்படுகிறது. யானைக்கு வட மொழியில் கஜம் என்று பெயர். அது கொண்டு கஜாரண்யம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. (தொடரும்)

No comments:
Post a Comment